மருத்துவமனையில் பழைய ரூ.500 வாங்க மறுத்ததால் தம்பி உடலை வாங்க முடியாமல் நடுவண்அமைச்சர் சதானந்தகவுடா தவிக்க நேரிட்ட சம்பவத்தால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மருத்துவமனையில் ரூ.500 வாங்க மறுத்ததால் தம்பி உடலை வாங்க முடியாமல் சதானந்தகவுடா தவிப்பு நடுவண் அமைச்சர் சதானந்த கவுடாவின் இளைய சகோதரர் பாஸ்கர் கவுடா கடந்த சில நாட்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார். மங்களூரில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து மருத்துவ மனைக்கு விரைந்து வந்த நடுவண்அமைச்சர் சதானந்த கவுடா, தன் சொந்த ஊரான மண்டேகொலு கிராமத்துக்கு பாஸ்கர் கவுடா உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தார். அப்போது பாஸ்கர் கவுடாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் செலுத்தும்படி சதானந்த கவுடாவிடம் பில் கொடுக்கப்பட்டது. உடனே சதானந்த கவுடா தன் உதவியாளரிடம் ரூ.2 லட்சம் கொடுக்க உத்தர விட்டார். இதையடுத்து அவரது உதவியாளர் பழைய ரூ.500 நோட்டு கட்டுகளை எடுத்து கொடுத்தார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் பழைய ரூ.500 நோட்டுகளை வாங்க மறுத்தனர். ரூ.2 லட்சத்துக்கு செல்லாத நோட்டுகளை எப்படி வாங்க முடியும்? என்று கூறி அவற்றை ஏற்க மறுத்தனர். இதனால் சதானந்த கவுடாவின் ஆதரவாளர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் புதிய ரூபாய் நோட்டுகள் தரும்படி திட்டவட்டமாக கூறினார்கள். இதன் காரணமாக சில மணி நேரத்துக்கு தம்பி உடலை கொண்டு செல்ல முடியாமல் நடுவண் சதானந்த கவுடா தவிக்க நேரிட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ரூ.2 லட்சம் பில் தொகைக்கு காசோலை கொடுக்க சதானந்த கவுடா முன் வந்தார். அதையும் மருத்துவமனை ஊழியர்கள் தயக்கத்துடனே பெற்றுக் கொண்டனர். மருத்துவமனைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நடுவண் அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் கே.எம்.சி. மருத்துவமனையில் ரூ.500 நோட்டுகளை வாங்காததால் நடுவண்அமைச்சர் சதானந்த கவுடா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து நடுவண் சுகாதார அமைச்சகத்திடம் புகார் கொடுக்கப் போவதாக அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



